மாதவிடாய் விடுப்பு பெண்களின் அடிப்படை உரிமை... உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
கர்நாடக அரசு பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பெண் ஊழியர்கள் சிலரே கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த விடுப்பு முறை பெண்களின் தொழில்முறை வாழ்க்கையைப் பாதிக்கும் என்றும், நிறுவனங்கள் பெண்களைப் பணியமர்த்தத் தயங்கும் என்றும் மனுவில் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மாதவிடாய் விடுமுறை என்பது பெண்களின் அடிப்படை உரிமை என்று அதிரடியாகத் தீர்ப்பளித்தது. இது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமையின் ஒரு பகுதியாகும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஆணும் பெண்ணும் சட்டத்தின் முன் சமம் என்றாலும், பெண்கள் உயிரியல் ரீதியாக வேறுபட்டவர்கள் என்பதை அங்கீகரிப்பதே உண்மையான சமத்துவத்திற்குச் சரியான அர்த்தத்தைத் தரும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
பெண்களின் உடல்நலனை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த கொள்கை முடிவை ரத்து செய்ய முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. அரசின் இந்த நடவடிக்கை பெண்களின் உரிமையைப் பாதுகாப்பதோடு அவர்களின் பணிச் சூழலை மேம்படுத்தும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்த முக்கியமான தீர்ப்பு நாடு முழுவதும் உள்ள பெண் ஊழியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!