சாதனை... துண்டிக்கப்பட்ட கையை மீண்டும் வெற்றிகரமாக பொருத்திய அரசு மருத்துவர்கள்!
களக்காடு அருகே உள்ள பத்மநிதி கிராமத்தைச் சேர்ந்த பிச்சை இசக்கி (21) என்ற இளைஞரின் இடது கை, கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி கோவில் கொடை விழா தகராறில் துண்டிக்கப்பட்டது. ரத்தம் சொட்டிய நிலையிலும், அவர் அதிகாலை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். மருத்துவர்கள் உடனடியாக முதலுதவி அளித்து, அவசரமாக அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
அன்று காலை 7 மணியளவில் போலீசார் கொண்டு வந்த துண்டிக்கப்பட்ட கையை மருத்துவர்கள் 10 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தினர். பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் எலும்பியல் துறை மருத்துவர்கள் இணைந்து இந்தச் சாதனையை நிகழ்த்தினர். முதலில் எலும்புகள் இணைக்கப்பட்டு, பின்னர் நுண்ணோக்கி உதவியுடன் ரத்த நாளங்கள், நரம்புகள் மற்றும் தசைநார்களும் நுட்பமாக இணைக்கப்பட்டன. இதன் மூலம் இளைஞருக்கு மீண்டும் கை செயல்பாட்டுக்கான நம்பிக்கை கிடைத்துள்ளது.
இந்த சிகிச்சையில் பங்கேற்ற மருத்துவர்கள், பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் டாக்டர்கள் அகமது மீரான், பாலாஜி, சூர்யா சர்மா, ராஜா, கோகுல், பால் வின்சென்ட், எலும்பியல் பேராசிரியர் டாக்டர் செல்வராஜன், உதவி மருத்துவர் அறிவு, மயக்கவியல் நிபுணர்கள் சௌந்தரி, லீலா மற்றும் செவிலியர்கள் அனிதா, ஜான்சிராணி ஆகியோர் அடங்குவர். டீன் டாக்டர் ரேவதி பாலன், இந்தச் சாதனையில் பங்கேற்ற அனைத்து மருத்துவர்களையும், பணியாளர்களையும் பாராட்டி வாழ்த்தியுள்ளார். நெல்லை அரசு மருத்துவமனையின் திறமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் இந்தச் சிகிச்சை, மாநிலம் முழுவதும் பாராட்டுக் குவிக்கிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!