ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதன்மை குற்றவாளி ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை மாதம் 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் முதலில் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்க பழியாக நடந்ததாக கூறப்பட்ட நிலையில் போலீசார் விசாரணையில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு அடுத்தடுத்து பகீர் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த சம்பவம் தொடர்பாக முதல் குற்றவாளியான வடசென்னையின் பிரபல தாதா ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு என பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், 10 வழக்கறிஞர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ரவுடி திருவேங்கடம் என்பவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகிய 2 பேர் வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ளதால், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது செம்பியம் போலீசார் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், ஆயுள் தண்டனை கைதியும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக உள்ள பிரபல தாதா நாகேந்திரனுக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கல்லீரல் பாதிப்பால் நாகேந்திரனின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!