அதிர்ச்சி வீடியோ... முதியவரின் கன்னத்தில் பலமுறை அறைந்த பெண் மருத்துவர்... அரசு மருத்துவமனையில் விபரீதம்!
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், முதியவர் ஒருவரை பெண் பயிற்சி மருத்துவர் அடுத்தடுத்து பலமுறை கன்னத்தில் அறையும் சிசிடிவி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இது குறித்து விசாரணைக்கு 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், பெண் மருத்துவர் ஒருவர் முதியவரை பலமுறை அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகி, சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
மருத்துவமனை மேலதிகாரிகள், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததையடுத்து, மருத்துவமனை மேலாளர் டாக்டர் அரவிந்த் காரே மற்றும் துணை மேலாளர் டாக்டர் அமித் யாதவ் தலைமையில் இரு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. மாநில முதல்வர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில் சம்பவம் குறித்த முழுமையான அறிக்கையும் கேட்கப்பட்டுள்ளது. இது குறித்து டாக்டர் காரே கூறுகையில், “இத்தகைய ஒழுங்கின்மையான நடத்தை ஏற்க முடியாதது. முதியவரை தாக்குவது தவறு. சம்பவத்தில் உண்மை கண்டறியப்படும்” என்றார்.
இதற்கிடையில் பயிற்சி மருத்துவர்கள் சங்கம் அந்த பெண் மருத்துவருக்கு ஆதரவாக புகார் அளித்து, முதியவர் தவறாக நடந்து கொண்டதாகவும், மருத்துவர் தற்காப்பு நடவடிக்கையாக நடந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் லோக் பந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். அஜ்மீர் ஜே.எல்.என் மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!