ரூ.2 கோடி லஞ்சம் பெற்று குற்றவாளியை தப்பிக்க விட்ட எஸ்.ஐ... ஹைதராபாத்தில் பரபரப்பு!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ரூ.23 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியை, ரூ.2 கோடி லஞ்சம் பெற்று தப்பிக்க விட்டதாக குற்றச்சாட்டில் அதிரடிப்படை எஸ்.ஐ. ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஹைதராபாத் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் உப்பளபதி சதீஷ். 2019 முதல் 2022 வரை முதலீட்டாளர்களிடம் அதிக வட்டி தருவதாகக் கூறி சுமார் 23 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் சிவசங்கரின் மகன் டாக்டர் வினய் குமாரிடம் மட்டும் 15.2 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 18 அன்று சதீஷ் கைது செய்யப்பட்டார். அவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. பின்னர், மும்பையில் இருந்து ஹைதராபாதுக்கு சதீஷ், அவரது மனைவி, மகள் ஆகியோரை விசாரணைக்காக போலீசார் அழைத்து வந்தபோது, சதாசிவபேட்டை அருகே மூவரும் போலீசிடம் இருந்து தப்பினர்.
பின்னர், சதீஷிடம் இருந்து ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு தப்பிக்க விட்டதாக அதிரடிப்படை எஸ்.ஐ. ஸ்ரீகாந்த் கவுடாவுக்கு எதிராக புகார் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், கவுடா தன் சக போலீஸ்காரர்களை அனுப்பி வைத்து, குற்றவாளிகள் இருந்த வாகனத்தை தானே ஓட்டிச் சென்றதும், முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில் சதீஷ் குடும்பத்தாரை தப்பிக்கச் செய்ததும் உறுதியாகியுள்ளது.
மஹாராஷ்டிராவின் கோலாப்பூரில், சதீஷ் பயணம் செய்த கார் கேட்பாரற்று நிறுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இதையடுத்து ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் உத்தரவின்படி எஸ்.ஐ. ஸ்ரீகாந்த் கவுடா இடைநீக்கம் செய்யப்பட்டார். தற்போது சதீஷை பிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!