டாடா டிரஸ்ட் அதிகார மோதல்... நிறுவனத்தை காக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!
டாடா குழுமத்தின் முக்கியமான அமைப்பான டாடா டிரஸ்ட்டில் ஏற்பட்டுள்ள அதிகார மோதல், தேசிய அளவில் கவனம் பெறத் தொடங்கியுள்ளது. இந்த மோதல், டிரஸ்ட்டின் மேலமைப்பு குழுவில் உள்ள உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் உருவானது.
செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற டாடா டிரஸ்ட் உயர்மட்ட நிர்வாக குழு கூட்டத்தில், டிரஸ்ட் தலைவர் நோயல் டாடா மற்றும் துணைத் தலைவர் வேணு சீனிவாசன், முன்னாள் பாதுகாப்பு செயலர் விஜய் சிங்கை மீண்டும் நியமிக்க முன்மொழிந்தனர். இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அறங்காவலர்களில் ஒருவரான மெஹாலி மிஸ்டரி உள்ளிட்ட நால்வர் எதிர்த்தனர். இதனால் குழுவில் கருத்து மோதல் உருவாகியது.
மேலும், அந்த நான்கு உறுப்பினர்களில் மூவர், மெஹாலி மிஸ்டரியை புதிய பதவிக்கு பரிந்துரை செய்த நிலையில், வேணு சீனிவாசன் அதனை நிராகரித்தார். இதன் விளைவாக, பதற்றம் மேலும் அதிகரித்தது. இந்நிலையில், டாடா குடும்பத்துடன் நெருக்கமானவராகக் கருதப்படும் விஜய் சிங் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். பின்னர், நோயல் டாடாவை பதவியிலிருந்து நீக்கும் முயற்சியில் மெஹாலி மிஸ்டரி தரப்பினர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும், டாடா சன்ஸ் நிறுவனத்தில் 18 சதவீத பங்குகளை வைத்திருக்கும் ஷாபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்துடன் மெஹாலி மிஸ்டரியின் நெருக்கம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில், டாடா டிரஸ்ட் தலைவர் நோயல் டாடா, துணைத் தலைவர் வேணு சீனிவாசன் மற்றும் டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் ஆகியோர், ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்தனர். அந்த சந்திப்பின் போது, நிறுவத்தின் நிலைத்தன்மையை பாதுகாக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அமித் ஷா தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த விவகாரம் டாடா சன்ஸின் செயல்பாடுகளை பாதிக்காத வகையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், நிறுவன நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அறங்காவலர்களை நீக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், டாடா டிரஸ்ட்டின் அறங்காவலர் குழு மீண்டும் கூடி, தொடரும் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!