கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை... டிரம்ப் கடும் எச்சரிக்கை!
அமெரிக்கா–கனடா வர்த்தக உறவுகள் மீண்டும் பதட்டமடைந்துள்ளன. சர்ச்சைக்குரிய அரசு விளம்பரத்தை காரணம் காட்டி, கனடாவுடன் இனி எந்த வர்த்தக பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து பல நாடுகளுடன் வர்த்தக வரிகளை உயர்த்தியுள்ளார். குறிப்பாக, கனடாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்து, அமெரிக்க உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். மேலும், சீனா மற்றும் ரஷியாவிலிருந்து பெண்டானில் ரசாயன இறக்குமதிக்காக 35 சதவீதம் வரை வரிவிதிக்கப்பட்டது.
இந்நிலையில், கனடாவின் ஒண்டோரியோ மாகாண அரசின் அனுமதியுடன், அரசு சார்பில் ஒலிபரப்பப்பட்ட ஒரு விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் டிரம்ப் மீது விமர்சனங்களும், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் “அதிக வரிவிதிப்புகள் வர்த்தக போருக்கு வழிவகுக்கும்” என்ற மேற்கோளும் இடம்பெற்றிருந்தது.
இந்த விளம்பரம் டிரம்பை கடும் கோபமடையச் செய்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கனடா பிரதமர் மார்க் கார்னி டிரம்பிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டு மன்னிப்பு தெரிவித்தார் மற்றும் விளம்பர ஒளிபரப்பை நிறுத்துவதாக அறிவித்தார்.
ஆயினும், இதனை ஏற்க மறுத்த டிரம்ப், வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம், “கனடாவை நான் விரும்புகிறேன்; கார்னி என் நண்பர். ஆனால், அந்த போலியான விளம்பரம் என்னை கடுமையாக வருத்தியது. எனவே கனடாவுடன் எந்த வர்த்தக பேச்சுவார்த்தையும் இனி இருக்காது,” என்று தெளிவாக கூறினார். அமெரிக்கா–கனடா உறவில் இதனால் புதிய பதற்றம் உருவாகியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!