திமுகவின் தோல்விக்கு இது தான் காரணமா இருக்கும்... தலைமைச் செயலக சங்கம் ஆவேசம்!
திமுகவுக்கு அரசு ஊழியர்களின் வாக்கு தேவையில்லையா? திமுகவின் தோல்விக்கு இது தான் பெரிய காரணமாக இருக்கும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை டிசம்பர் மாதத்திற்குள் அறிவித்து, இதே நிதியாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு இன்னும் நிறைவேற்றாதது குறித்து வெங்கடேசன் கடும் அதிருப்தி தெரிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை புறக்கணிப்பது திமுகவிற்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்தார்.
இது குறித்து பேசிய அவர், “பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணம் எல்ஐசியில் முதலீடு செய்யப்பட்டு, ஓய்வூதியம் வழங்குவதற்கான தீர்வு காணப்படவில்லை. இதே நிலை அதிமுக ஆட்சியிலும் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்குவோம் என வாக்குறுதி அளித்தும், அதனை நிறைவேற்றாமல் குழுவை அமைத்து நாடகம் நடத்தி வருகின்றனர்.
அரசு நிதிநிலை அறிக்கையில் ஓய்வூதிய நிதி 90,000 கோடியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை பொதுநலத் திட்டங்களுக்காகவும் செலவிடாமல் முடக்கி வைத்திருப்பது நிதி மேலாண்மைக்கு எதிரானது. 5 ஆண்டுகள் ஆகியும் எந்தத் தீர்வும் எடுக்காதது முறையற்றது” என்றார்.
“அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் வாக்கு திமுகவிற்கு தேவையில்லையா என்றே தோன்றுகிறது. அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்திலும் அவர்களைப் பற்றிய ஒரு சொல் கூட இல்லை. இரு கட்சிகளும் அரசு ஊழியர்களின் வாக்குகளை மதிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான தீர்வை 2026 தேர்தல் வழங்கும் பாருங்க. தணிக்கைத் துறை குறைகளை சரிசெய்யாமல், ஓய்வூதியம் கேட்கமாட்டேன் என்ற உறுதிமொழியுடன் பணத்தை வழங்குவது கழுத்தில் கத்தி வைப்பது போல உள்ளது. அரசு துறைகளில் மூன்றில் ஒரு பங்கு பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்பாமல் அவுட்சோர்சிங் மூலம் பணியாளர்களை நியமனம் செய்வது சமூக நீதிக்கு எதிரானது” என்றார்.
மேலும், “ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்த்தியும், தமிழக அரசு 4 மாதமாக அதை வழங்கவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை டிசம்பருக்குள் அறிவிக்காவிட்டால், நவம்பர் 18ஆம் தேதி ‘ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்’ நடைபெறும். அதன் பின்னர் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கும் செல்ல வேண்டிய சூழல் உருவாகும்” என எச்சரித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!