ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவருக்கு சோகம்! சக்கரத்தில் சிக்கி பலி!

 

பொள்ளாச்சியில், தனியார் பேருந்து ஒன்றில் கல்லூரி மாணவர் படிக்கட்டில் நின்றபடியே ஜன்னல் கம்பிகளைப் பிடித்து தொங்கியபடி பயணித்த போது, நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில், பேருந்தின் பின் சக்கரம் ஏறி, உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தர்.

கேரள மாநிலம் மறையூரைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகன் மதன்லால் (22).  பொள்ளாச்சி அருகே, தனியார் கல்லூரி ஒன்றில்,  மதன்லால் பி.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்த ஆவின் அபிஷேக் (19) என்பவர் பி.சி.ஏ. படித்து வருகிறார். மதன்லால் உடுமலையில் தங்கி இருந்து கல்லூரிக்கு தினமும் பேருந்தில் சென்று வந்து கொண்டிருந்தார். 

இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் கோவையில் இருந்து பழனி நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் உடுமலை நோக்கி மதன்லால் சென்று கொண்டிருந்தார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மதன்லால், ஆவின் அபிஷேக் ஆகியோர் பேருந்தின் படிக்கட்டில், ஜன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு தொங்கியபடி பயணம் செய்தனர். திப்பம்பட்டியில் வளைவில் உள்ள தனியார் பள்ளி அருகில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, படிக்கட்டில் நின்று கொண்டிருந்த 2 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

இதில் மதன்லால் பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஆவின் அபிஷேக் படுகாயத்துடன் உயிர் தப்பினார். மேலும் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கோமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

மேலும் பழனி பெருமாள்புதூரை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் விஜயகுமார் (40), கூளநாயக்கன்பட்டியை சேர்ந்த நடத்துநர் ரகுபதி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்தில் விதிமுறைகளை மீறி அதிகமாக பயணிகளை ஏற்றி சென்றதே விபத்திற்கு காரணம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. தனியார் கல்லூரி மாணவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த தொழில் அதிக லாபம் தரும்