திருமணமான 20 நாட்களில் சோகம்... புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை!
இருவீட்டார் சம்மதத்துடன் உற்றார், உறவினர்கள் கூடியிருந்து வாழ்த்தி திருமணம் செய்து வைத்த நிலையில், திருமணமான 20 நாட்களில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இன்னும் மறுவீடு கூட முழுசா முடியலையே என்று விசேஷத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அழுதனர்.
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (37). தனியார் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக வேலை செய்து வந்த இவருக்கு கடந்த 4ம் தேதி ஜெயஸ்ரீ (25) என்பவருடன் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணமானது. திருமணமாகி ஒரு மாதம் கூட முழுசாக முடியாத நிலையில், கடந்த ஒரு வார காலமாகவே கணவன், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதை அடுத்து நேற்று அதிகாலை 3 மணிக்கு கார்த்திகேயன் தனது மனைவி ஜெயஸ்ரீயை வீட்டின் படுக்கைறை உள்ளே வைத்து வெளியே தாழ்ப்பாள் போட்டுவிட்டு மற்றொரு அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜெயஸ்ரீ ஜன்னல் வழியாக கதவைத் திறக்க கூறி சத்தம் போட்டுள்ளார். எதிர் வீட்டில் வசித்து வரும் கார்த்திகேயனின் பெற்றோர் மற்றும் அருகில் இருப்பவர்கள் ஜெயஸ்ரீயின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்துள்ளனர். அந்த நேரத்தில் செவ்வாப்பேட்டை போலீசார் அவ்வழியாக ரோந்து சென்றுள்ளனர். பின்னர் போலீசார் மற்றும் கார்த்திகேயனின் பெற்றோர் மாடிக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கார்த்திகேயன் மின்விசிறியில் தூக்கிட்டு சடலமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 20 நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!