டீ குடிச்சுட்டு காசு கொடுத்த சில வினாடிகளில் மயங்கி சரிந்து இளைஞர் மரணம்... பகீர் சிசிடிவி காட்சி!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், 29 வயதேயான ரயில்வே ஊழியர் ஒருவர் தேநீர் அருந்திவிட்டுத் திரும்பியபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் திடீர் மாரடைப்புச் சம்பவங்கள், இந்த மரணத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜான்சி ரயில்வே அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த அஜய் குஷ்வாகா, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தனது தந்தை மறைவுக்குப் பிறகு கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்துள்ளார். கடந்த திங்கள்கிழமை இரவு சுமார் 7:49 மணியளவில், பணிக்கு இடையே தேநீர் அருந்துவதற்காகச் சித்ரா சௌக் பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்றுள்ளார். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன.
அஜய் மிகவும் ஆரோக்கியமாகத் தென்பட்டு, அமைதியாகத் தேநீர் அருந்திவிட்டு அதற்கான பணத்தையும் கொடுத்துள்ளார். பின்னர் கடைக்காரரிடம் ஒரு பிளாஸ்டிக் பையை வாங்கித் திரும்ப முற்பட்டபோது, அடுத்த சில வினாடிகளில் சட்டென நிலைதடுமாறி அப்படியே தரையில் சாய்ந்துள்ளார். பதறியடித்து வந்த குடும்பத்தினரும் நண்பர்களும் 10 நிமிடத்திற்குள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
அஜய் குஷ்வாகாவின் இந்தத் துயர மரணத்திற்கு மாரடைப்பு (Cardiac Arrest) காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்டமாகச் சந்தேகிக்கப்படுகிறது. ஆரோக்கியமாகத் தெரிந்த ஒரு இளைஞர், டீ குடித்து முடித்த சில நொடிகளிலேயே சுருண்டு விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. "மரணம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரிவதில்லை" எனப் பலரும் இந்தச் சம்பவத்தைக் கண்டு தங்களது சோகத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!