பவானிசாகர் அணை தொடர்ந்து 10 நாட்களாக 104 அடியிலே நீட்டிப்பு
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 104 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2,511 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக 1,500 கன அடியாக திறக்கப்பட்டு வருகிறது. பவானி ஆற்றில் 1,000 கன அடி என மொத்தம் 2,500 கன அடி நீர் பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டில் 2 -வது முறையாக பவானிசாகர் அணை 100 அடியை எட்டி உள்ளது. தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து 104 அடியில் நீடித்து வருகிறது.
