எச்சரிக்கை! தனியார் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

 
எச்சரிக்கை! தனியார் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

ஒவ்வொரு ஆண்டும் தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் தொடங்கும். இந்த கால கட்டத்தில் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவது வழக்கம். இதில் குளித்து களிப்பதற்காக தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து மட்டுமல்ல இந்தியா முழுவதும் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவர். தமிழகத்தில் கொரோனா 2வது அலை இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் ஜூலை 31வரை சுற்றுலா தலங்களுக்கு செல்ல தமிழக அரசு தடை விதித்து உள்ளது.

ஆனால் சில நாட்களாக தொடர்ந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து அருவியை பார்த்து விட்டு குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். இவர்கள் அனைவரும் செங்கோட்டை அருகே குண்டாறு அணையை சுற்றி இருக்கும் தனியார் அருவிகளுக்கு சென்று குளித்து வந்தனர்.

இந்நிலையில் இது குறித்து மாவட்ட கலெக்டர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதையும் மீறி சில சுற்றுலா பயணிகள் தனியார் அருவிகளில் குளித்து வருகிறார்கள். இது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும். இதனால் தனியார் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

From around the web