சந்தனம், குங்குமம் புத்தாடை , வளையல்கள் அணிவித்து நாய்க்கு வளைகாப்பு!
தேனி மாவட்டத்தில் உப்புக்கோட்டை காமராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் 43 வயது குமரேசன்.இவர் காண்டிராக்டராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி 38 வயது அம்சவேணி . இவர்களுக்கு 22 வயது தமிழ்செல்வன் என்ற மகனும், 18 வயது கல்பனா தேவி என்ற மகளும் உள்ளனர்.குமரேசனுக்கு சிறு வயதில் இருந்தே நாய்கள் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம்.
இவரது வீட்டில் நாட்டு நாய், பொமேரியன், கோம்பை, லேபர் டாக், சித்திபாறை என 10 க்கும் மேற்பட்ட நாய்கள் வளர்த்து வருகிறார்.இத்துடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு தெருவோரம் சுற்றித் திரிந்த பெண் நாயையும் சேர்த்து வளர்த்து வந்தனர். அதற்கு சில்க் சுமிதா என பெயரிட்டனர். சமீபத்தில் இந்த நாய் கருவுற்றது. இதற்கு தனது வீட்டில் வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர்.
உறவினர்கள் அனைவரையும் வரவழைத்து சில்க் சுமிதாவுக்கு பிடித்த எலுமிச்சை, புளி, தயிர், பொங்கல், கேசரி சாதம் என 5 வகையான உணவுகளை வழங்கினர்.சந்தனம், குங்குமம் வைத்து , புதிய ஆடை, வளையல்கள், மாலைகள் அணிவித்து வளைகாப்பு நடத்தினர்.
இது குறித்து குமரேசன் நான் சிறு வயது முதலே நாய்களை வளர்த்து வருகிறேன். இவைகள் செல்லப் பிராணிகள் அல்ல. என் பிள்ளைகள். என் உறவுகள். வீட்டில் நானும் என் பிள்ளைகளும் என்ன உணவு சாப்பிடுவோமோ அதையே தான் அவைகளுக்கும் கொடுப்போம். நன்றி மறவாமல் இருக்கும் சில்க் சுமிதாவுக்கு வளைகாப்பு நடத்தியதில் பெருமை அடைகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
