காதலியைக் குத்திக் கொன்று சாக்குப்பையில் அடைத்து வீசிவிட்டு காதலன் தலைமறைவு... திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கொடூரம்!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பாலாபூர் பகுதியில், தன்னைத் திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொன்று, சடலத்தைச் சாக்குப்பையில் அடைத்து வீசிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலாபூர் பகுதியில் சாக்குப்பை ஒன்றில் சடலம் இருப்பதாக இன்று அதிகாலை 5 மணியளவில் 'டயல் 100' உதவி எண்ணிற்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் உயிரிழந்தவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான ரெஹானா என்பது தெரியவந்தது. இவர் அகமது சலாம் (21) என்ற இளைஞரைக் காதலித்து வந்துள்ளார்.

ரெஹானா தன்னை உடனடியாகத் திருமணம் செய்து கொள்ளுமாறு அகமது சலாமிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அகமது, ரெஹானாவைக் கத்தியால் கொடூரமாகக் குத்திக் கொலை செய்துள்ளார். கொலையை மறைப்பதற்காகச் சடலத்தைச் சாக்குப்பையில் அடைத்து அப்புறப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

ரெஹானாவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள காதலன் அகமது சலாமைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
