இன்ஸ்டா ரீல்ஸ் விபரீதம்... தந்தை கண் முன்னே உயிரிழந்த இளைஞன்!
உலகம் முழுவதுமே இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்தில் பலர் உயிரிழந்து வருகின்றனர். இன்னும் சிலர் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கின்றனர். கணவன், மனைவிக்கிடையே சண்டை, குடும்பத்தில் பிரச்சனை, தாய் - மகளுக்கிடையே சந்தேகத்தால் தற்கொலை என்று பல விபரீதங்களை இந்த ரீல்ஸ் மோகம் ஏற்படுத்தி, மனிதர்களிடையேயான உறவுகளை இன்னும் தூரமாக்கி விட்டது. இந்நிலையில், இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்தில் பாம்புக்கு முத்தம் கொடுத்த சிறுவன், தந்தையின் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், கமாரெட்டி மாவட்டம், பான்ஸ்வாடா மண்டலத்தில் உள்ள தேசாய்பேட் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காராம். இவரது மகன் சிவராஜுலு (வயது 23). கங்காராம் பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சிவராஜூலுவும் தனது தந்தையிடம் பாம்பு பிடிப்பதையும், லாவகமாக பாம்பைக் கையாளுதலைக் கற்றுக் கொண்டார். இந்நிலையில் தந்தை கங்காராம் நாகப்பாம்பை மகனிடம் கொடுத்து ரீல்களை எடுக்கச் சொன்னார்.

அதன்படி, சிவராஜூலு பாம்புடன் வாயில் முத்தம் கொடுத்து போஸ் கொடுத்தார். அப்போது, அவரது நாக்கை பாம்பு கடித்துள்ளது. இதை உணராமல் சிவராஜூலு வீடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். சில நிமிடங்களில் திடீரென மயங்கி கீழே விழுந்தார். சிவராஜூலுவை பாம்பு கடித்ததை உணர்ந்த அவரது தந்தை உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ரீல்ஸ் மோகத்தால் தந்தை கண்முன்னே இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
