இன்று முழு கடையடைப்பு போராட்டம்... புதுவையில் பந்த்
புதுவையில் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இன்று இண்டியா கூட்டணி சார்ப்பில் புதுவையில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் முழு கடையடைப்பு போராட்டத்தை அடுத்து, அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக புதுவையில் வருடந்தோறும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதேபோல இந்த வருடமும் கடந்த பிப்ரவரி மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர், மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் உயர்வு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மக்களவைத் தேர்தல் குறுக்கிட்டதால், அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வை அரசு அப்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கட்டண உயர்வை பரிசீலிக்கும்படி அரசு சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டது. தற்போது மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், முன் தேதியிட்டு கடந்த ஜூன் 16ம் தேதி முதல் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதற்கு புதுவை அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் முதலியார்பேட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இண்டியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலாளர் தேவபொழிலன் மற்றும் சிபிஐ(எம்எல்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கடசி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மின் கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி இன்று செப்டம்பர் 18-ம் தேதி புதன்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க இண்டியா கூட்டணி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மின் கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெறக் கோரி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என 4 பிராந்தியங்களிலும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். மின்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். துணை மின் கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
