இளம்பெண்ணுக்கு லாட்டரியில் ரூ.1 கோடி ஜாக்பாட்.. ஒரே நாளில் மாறிய வாழ்க்கை!
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், 'டியர் வீக்லி லாட்டரி' (Dear Weekly Lottery) போட்டியில் முதல் பரிசான 1 கோடி ரூபாயை வென்று கோடீஸ்வரராகியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர்பகுதியைச் சேர்ந்த லட்சுமி பாண்டே எனும் பெண்ணுக்கு அதிர்ஷ்டம் சிக்கிம் மாநில அரசாங்கத்தால் நடத்தப்படும் புகழ்பெற்ற லாட்டரி திட்டத்தின் மூலம் வாழ்க்கையை மாற்றி அமைத்துள்ளது. பரிசுத் தொகை: ரூ. 1 கோடியைப் பெற்று தந்த டிக்கெட் எண்: 87A 66433.
தனது வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த லட்சுமி பாண்டே, இது ஒரு கனவு நனவான தருணம் எனக் குறிப்பிட்டுள்ளார். "இந்த வெற்றி பழைய நினைவுகளையும், எதிர்காலம் குறித்த நல்ல எண்ணங்களையும் என்னுள் விதைத்துள்ளது. கோடீஸ்வரர் ஆவது இவ்வளவு எளிதானது என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. டியர் லாட்டரி போன்ற தளங்கள் சாதாரண மக்களும் தங்கள் அதிர்ஷ்டத்தைச் சோதிக்க ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகின்றன," என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பரிசுத் தொகையைப் பெறுவதற்கான நடைமுறைகள்
தற்போது லட்சுமி பாண்டே தனது வெற்றி பெற்ற அசல் டிக்கெட் மற்றும் தேவையான அடையாள ஆவணங்களுடன் சிக்கிம் மாநில லாட்டரி அலுவலகத்தில் உரிமை கோரியுள்ளார். லாட்டரித் துறை அதிகாரிகள் அவரது ஆவணங்களைச் சரிபார்த்து வருகின்றனர். வெற்றித் தொகையில் அரசு விதிமுறைப்படி 30 சதவீத வருமான வரி (TDS) பிடித்தம் செய்யப்பட்ட பின்னரே மீதமுள்ள தொகை அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இந்தியாவின் பல மாநிலங்களில் லாட்டரிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிக்கிம், கேரளா, மேகாலயா உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் 'டியர் லாட்டரி' குறைந்த விலையில் விற்கப்படுவதால், உத்தரப் பிரதேசம் போன்ற அண்டை மாநில மக்களிடையே இது மிகவும் பிரபலமாக உள்ளது.
