அந்தரத்துல பறந்தபடியே சாப்பிடலாம்! உலகின் உயரமான தொங்கும் உணவகம் இப்போ இந்தியாவில்! குவியும் சுற்றுலா பயணிகள்!

 
உலகின் உயரமான தொங்கும் ரெஸ்டாரெண்ட் மணாலி

உலகின் உயரமான தொங்கும் ரெஸ்டாரெண்ட் இப்போது இந்தியாவில். இமாச்சல பிரதேசம், மணாலில் முதன் முறையாக பறக்கும் உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. உலகின் உயரமான இந்த தொங்கும் உணவகத்திற்கு சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

தரையில் இருந்து 160 அடிக்கும் மேலான உயரத்தில் கிரேன் உதவியுடன் அந்தரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த உணவகத்தைப் பார்த்து அசந்து போகும் சுற்றுலாப் பயணிகள், குடும்பத்துடன் அமர்ந்து உணவு அருந்துவதை சாகசமாக நினைத்து மகிழ்கிறார்கள். இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் மொத்தம் 22 பேர் வரை அமர்ந்து அந்தரத்தில் பறந்தபடியே உணவு அருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகின் உயரமான தொங்கும் ரெஸ்டாரெண்ட் மணாலி

கூடுதல் அட்ராக்‌ஷனாக 360 டிகிரி சுழலும் வகையில், 24 இருக்கைகள் கொண்ட ஒரு பெரிய மேசை கொண்ட இந்த உணவகத்தில் சுற்றுலா பயணிகள் அமர்ந்த பிறகு கிரேன் உதவியுடன் தரையிலிருந்து 160 அடி உயரத்திற்கு மேலே தூக்கப்படுகிறது. இருக்கையில் அமர்பவர்கள் அனைவரும் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

அதன் பின்னர்.. உயரே... உயரே என்று உங்கள் காதலியுடனோ, மனைவியுடனோ... உயிரே... உயிரே என டூயட் பாடலாம். செல்ஃபி எடுத்து மகிழலாம்... இல்லையெனில் ஜென் நிலையில், இயற்கையை ரசிக்கலாம். இயற்கை அழகை ரசித்தபடியே, சாகசத்தை அனுபவித்துக் கொண்டு, தொங்கும் சாப்பாட்டு மேசையில் பரிமாறப்பட்டு இருக்கும் உணவை ரசித்து சாப்பிடுவது வாழ்க்கையில் ஆகப் பெரிய த்ரில்லிங்கான அனுபவம் தான். அத்தனை உயரத்தில் இருந்தபடி சுத்தமான காற்று, பனி போர்வை போர்த்திய மலை என மணாலியின் மொத்த அழகையும் ரசிப்பது கூடுதல் வாழ்நாள் அனுபவம். 


இந்த பறக்கும் உணவகம் குறித்து அதன் உரிமையாளர் கூறும் போது, ‘‘இரண்டு மதிய உணவு, ஒரு மாலை உணவு, அல்லது இரண்டு இரவு உணவு என ஒவ்வொன்றும் 45 நிமிடங்களுக்கு இடைவெளிகளில் இந்த உணவகத்தில் பரிமாறப்படுகிறது. மொத்தம் உள்ள 5 அமர்வுகளில் ஏதேனும் ஒன்றில் இருக்கை அல்லது முழுமையான டேபிளை சுற்றுலா பயணிகள் குழுவாக பதிவு செய்யலாம். 

இந்த அனுபவத்திற்காக தலா ஒருவருக்கு கட்டணமாக ரூ.3,999 வசூலிக்கப்படுகிறது. ரூ.9 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் திறக்கப்பட்ட உடனேயே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது’’ என்று உற்சாகத்துடன் கூறினார்.

இனி மணாலிக்கு சுற்றுலா செல்பவர்கள் இந்த பறக்கும் உணவகத்தில் அமர்ந்து உணவு சாப்பிடுவதை கண்டிப்பாக தவறவிடமாட்டார்கள். வயிற்றுக்கு அளிக்கப்படும் உணவின் போது இயற்கை அழகுடன் சேர்ந்து கண்ணுக்கும் விருந்து என்றால் யாருக்குத்தான் பிடிக்காது?

From around the web