இந்தியாவில் ஆப்பிள் பே (Apple Pay) அறிமுகம் - எப்படி பயன்படுத்துவது? - முழு விபரம்

 
ஆப்பிள் பே Apple Pay

ஆப்பிள் நிறுவனத்தின் பிரபல டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையான 'ஆப்பிள் பே' தற்போது அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐபோன் மற்றும் பிற ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்தி எளிதாகப் பணம் செலுத்த முடியும்.

ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றில் ஆப்பிள் பே சேவையைப் பயன்படுத்தலாம். மேக் சாதனங்களுக்கான ஆதரவு விரைவில் வழங்கப்படவுள்ளது.

இந்தியாவில் முதற்கட்டமாக ஆக்சிஸ் வங்கி வழங்கும் விசா மற்றும் மாஸ்டர்கார்டு கிரெடிட் கார்டுகளை மட்டுமே இதில் பயன்படுத்த முடியும். எச்டிஎப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட பிற வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதால், விரைவில் மற்ற வங்கிக் கார்டுகளுக்கும் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் பே-யில் யுபிஐ வழியாகப் பணம் செலுத்தும் வசதி தற்போது இல்லை. இது முழுக்க முழுக்க கிரெடிட் கார்டு அடிப்படையிலான பணப்பரிவர்த்தனையாக மட்டுமே செயல்படுகிறது. எனவே கூகுள் பே, போன்பே போல நேரடியாக வங்கியிலிருந்து பணம் செலுத்த முடியாது.

உங்களது ஆப்பிள் வாலட் செயலியில் தகுதியான கிரெடிட் காரைச் சேர்த்து, வங்கி கேட்கும் சரிபார்ப்பு நடைமுறைகளை முடிக்க வேண்டும். கடைகளில் என்.எப்.சி வசதியுடன் கூடிய காண்டாக்ட்லெஸ் பிஓஎஸ் இயந்திரம் இருந்தால், ஐபோனை அங்கே காண்பித்து எளிதாகப் பணம் செலுத்தலாம்.

ஒருவேளை ஐபோன் தொலைந்துபோனால், 'லாஸ்ட் மோட்'  வசதியைச் செயல்படுத்துவதன் மூலம் அந்தச் சாதனத்தில் உள்ள ஆப்பிள் பே தானாக முடக்கப்பட்டுவிடும். இதனால் பயனர்கள் பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியும்.