இடைத்தேர்தல் சர்ச்சை... மதுராந்தகத்தில் வாக்காளர்களுக்கு தவெகவினர் பணம் கொடுத்ததாகப் பரவும் வீடியோ!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து நடைபெற்ற பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரவிருக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமலில் உள்ளன. இதற்கிடையே, மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்துத் தொண்டர்களும் நிர்வாகிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, ரெட்டிபாளையம் பகுதியில் தவெகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது, அப்பகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதுடன், அது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இடைத்தேர்தல் நேரத்தில் இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள தவெக நிர்வாகிகள், பிரசாரத்தின் போது தங்களை வரவேற்று ஆரத்தி எடுத்த பெண்களுக்கு வழக்கமான முறைப்படி பணம் வழங்கப்பட்டதே தவிர, ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு எந்தவிதப் பணமும் வழங்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.
