புதுச்சேரியில் கனமழையால் மதில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு - 2 பெண்கள் காயம்!
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில், கனமழை காரணமாக தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 80 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அத்தொழிற்சாலையின் சுமார் 25 அடி நீளமும் 15 அடி உயரமும் கொண்ட பிரம்மாண்ட சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. சுவர் இடிபாடுகளில் சிக்கி 80 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களைப் போராடி மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இதில் காயமடைந்த இரண்டு பெண்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
