எஸ்.பி.பி.க்கு 10 அடி உயர சிலை திறப்பு... கீரவாணி திறந்து வைத்தார் - சித்ரா, மனோ, ஹரிஹரன் கண்ணீர் மல்க அஞ்சலி!
40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி உலக சாதனை படைத்த 'பாடும் நிலா' எஸ்.பி.பி-யின் நினைவாக, கேரள மாநிலம் பாலக்காட்டில் அவரது முழு உருவச்சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது.
கண்ணூர் பய்யன்னூரைச் சேர்ந்த பிரபல சிற்பி கானாயி உன்னி இந்தச் சிலையை வடிவமைத்துள்ளார். சுமார் 10 அடி உயரம் கொண்ட இந்தப் பிரம்மாண்ட சிலை, கண்ணாடி உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. கோவை - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், பாலக்காடு மருத்துவக் கல்லூரி அருகே உள்ள வி.டி. பட்டத்திரிப்பாடு நினைவகத்தில் இந்தச் சிலை கம்பீரமாக நிறுவப்பட்டுள்ளது.
ஆஸ்கார் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் கீரவாணி இந்தச் சிலையைத் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், "எஸ்.பி.பி. ஒரு தனிமனிதர் அல்ல, அவர் ஒரு சகாப்தம். அவரது குரல் இருக்கும் வரை அவர் நம்முடனேயே வாழ்வார்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்த விழாவில் தென்னிந்தியாவின் முன்னணி பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.
கே.எஸ். சித்ரா, ஹரிஹரன், மனோ, சுஜாதா, உன்னி மேனன், ஸ்ரீநிவாஸ், விஜய் ஜேசுதாஸ், மது பாலகிருஷ்ணன் ஆகியோர் எஸ்.பி.பி-யின் சிலையைத் தொட்டு வணங்கினர். பல பாடல்களில் எஸ்.பி.பி-யுடன் இணைந்து பணியாற்றிய பாடகி சித்ரா மற்றும் நெருங்கிய நண்பரான பாடகர் மனோ ஆகியோர் சிலையின் முகத்தைப் பார்த்ததும் கண்கலங்கி அழுதது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. எஸ்.பி.பி-யின் மகன் எஸ்.பி.பி. சரண் மற்றும் மகள் பல்லவி ஆகியோர் இந்தத் தந்தைக்கான கௌரவத்தைக் கண்டு நெகிழ்ந்தனர்.

சிலை திறப்பு விழாவிற்குப் பிறகு, எஸ்.பி.பி-யின் புகழ்பெற்ற பாடல்களைக் கொண்டு 'சங்கீத மேகம்' என்ற தலைப்பில் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னணி பாடகர்கள் அவரது பாடல்களைப் பாடி அவருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
