தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - உளவுத்துறை டிஜிபி மாற்றம்!
தமிழகத்தில் நிர்வாக நலன் கருதி 10-க்கும் மேற்பட்ட உயர்மட்ட ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த இடமாற்றப் பட்டியலில் உளவுத்துறை மற்றும் சைபர் கிரைம் பிரிவுகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை உளவுத்துறை டிஜிபியாக பணியாற்றி வந்த பால நாக தேவி, தற்போது சைபர் கிரைம் பிரிவின் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். பாதுகாப்பு உளவுப்பிரிவு டிஐஜியாக தர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுடன் மயில்வாகனன், சரவணன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பல்வேறு முக்கியப் பொறுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
புதிய அரசு பதவியேற்றுள்ள சூழலில், உளவுப்பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வளர்ந்து வரும் தொழில்நுட்பக் குற்றங்களைத் தடுக்க சைபர் கிரைம் பிரிவுக்குப் புதிய தலைமை நியமிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

காவல்துறையில் இன்னும் பல மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் டிஜிபி மட்டத்திலான மாற்றங்கள் அடுத்த சில நாட்களில் இருக்கும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
