தமிழகத்தில் டெங்குவால் 10 பேர் பலி... பொதுமக்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அறிவுறுத்தல்!
தமிழகம் முழுவதும் பரவி வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் அதைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் அருண்ராஜ் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து விவரிக்க, முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 10 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர், இதுவரை மொத்தம் 21,655 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

சென்னையில் டெங்கு பாதிப்பு தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதாகவும், டெங்குவை முழுமையாக ஒழிக்கப் பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு மிக அவசியமானது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் தேங்கவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசு உற்பத்திக்குக் காரணமாக இருப்பவர்களுக்குத் தராதரம் பார்க்காமல் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களுக்குச் செல்வோரில் தேவைப்படுவோர் முகக்கவசம் அணிந்து கொள்ளலாம். மேலும், சென்னையில் மழைக் காலத்திற்கு முன்பாக முடிக்கப்பட வேண்டிய மழைநீர் வடிகால் பணிகள் இந்த மாத இறுதிக்குள் முழுமையாக நிறைவடையும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
