ஐ.டி. பெண் ஊழியரின் கார் கண்ணாடியை உடைத்து 10 சவரன் நகை, லேப்டாப் திருட்டு!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் புகழ்பெற்ற தசரா திருவிழாவைக் காண வந்த பெங்களூரு ஐ.டி. பெண் ஊழியரின் கார் கண்ணாடியை உடைத்து, நகை மற்றும் மடிக்கணினியைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் டென்நேரு காஞ்சிபாடு பகுதியைச் சேர்ந்தவர் சாய்பிரியங்கா (26). பெங்களூரில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வரும் இவர், தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்திற்கு வந்துள்ளார். நேற்றைய தினம் கருங்காலி அம்மன் கோவில் தெருவில் உள்ள தொடக்கப் பள்ளி அருகில் தனது காரை நிறுத்திவிட்டு, முத்தாரம்மன் கோவிலுக்குச் சென்றுள்ளார்.

கோவில் வழிபாட்டை முடித்துவிட்டுத் திரும்பி வந்து பார்த்தபோது, காரின் பக்கவாட்டுக் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த இரண்டு தங்கச் சங்கிலிகள், இரண்டு ஜோடி வளையல்கள் மற்றும் ஒரு ஜோடி கம்மல் உள்ளிட்ட 10 சவரன் நகைகள் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட சாய்பிரியங்கா அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.
