இரயில் மீது கல் வீசினால் 10 ஆண்டுகள் சிறை - இரயில்வே கோட்டம் எச்சரிக்கை!

 
கல் கற்கள் ரயில் கல் கற்கள் ரயில்

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்கும் நோக்கில், இரயில்வே சட்டம் 1989-ன் கீழ் ரயில் மீது கற்கள் வீசினால் 10 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே துறை கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை கடற்கரை - தாம்பரம், சென்னை - அரக்கோணம் மற்றும் சென்னை - கும்மிடிப்பூண்டி ஆகிய புறநகர் பாதைகளில் கல் வீச்சு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.  தண்டவாள ஓரம் விளையாடும் சிறுவர்கள் அல்லது போதை ஆசாமிகள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக இரயில்வே போலீசார் கண்டறிந்துள்ளனர்.

வந்தே பாரத் கற்கள் கல்

இது இரயில் ஜன்னல் கண்ணாடிகளைச் சேதப்படுத்துவதுடன், பயணிகளுக்குக் கண் பார்வை பறிபோகும் அளவிற்குத் தீவிரமான காயங்களையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக வந்தே பாரத் போன்ற இரயில்களின் விலையுயர்ந்த கண்ணாடிகள் சேதமடைவதால் இரயில்வே நிர்வாகத்திற்குப் பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது.

இரயில்வே சட்டம், 1989-ன் பிரிவு 150-ன் கீழ் இத்தகைய செயல்கள் மிகக் கடுமையான குற்றமாகக் கருதப்படுகின்றன: இரயில் மீது கல் வீசி பயணிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். ஒருவேளை அந்த கல் வீச்சால் உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில், குற்றவாளிக்கு மரண தண்டனை வரை விதிக்கவும் சட்டத்தில் இடமுண்டு.

கல்

குற்றவாளிகளை அடையாளம் காணச் சென்னை இரயில்வே கோட்டம், தண்டவாள ஓரங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதுடன், ட்ரோன் மூலமும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். தண்டவாள ஓரம் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்குக் கல் வீச்சால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள், தண்டவாள ஓரம் யாராவது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்தாலோ அல்லது கல் வீச முயன்றாலோ உடனடியாக இரயில்வே பாதுகாப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.