திருச்செந்தூரில் ஆடி அமாவாசையில் 100 அடி உள்வாங்கிய கடல்: ஆராய்ச்சியாளர் விளக்கம்!

 
திருச்செந்தூர் கடல்

ஆடி அமாவாசை தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முதல் அய்யா வைகுண்டர் அவதாரபதி வரை சுமார் 100 அடி தூரத்திற்குப் திடீரெனக் கடல் உள்வாங்கி காணப்பட்டது.

கடல் நீர் உள்வாங்கியதால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இதனால் அச்சமடையாத பக்தர்கள் வழக்கம்போலக் கடலில் புனித நீராடியதுடன், பாறைகளின் மீது ஏறி நின்று 'செல்ஃபி' எடுத்தும் மகிழ்ந்தனர். காலையில் உள்வாங்கிய கடல் நீர், மாலையில் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி நிலவியல் துறை உதவிப் பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான செல்வம் இது குறித்து கூறுகையில்,  அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் புவிஈர்ப்பு விசை காரணமாகக் கடல் நீர்மட்டம் உயர்வதும் தாழ்வதும் வழக்கமான இயற்கை நிகழ்வாகும்.

திருச்செந்தூர் கடல்

தூத்துக்குடி மாவட்டக் கடற்கரைப் பகுதிகள் நில அமைப்பில் மேடானதாகவும், முனை போன்று கடலுக்குள் நீட்டிக்கொண்டும் அமைந்திருக்கும். இதனால் கடல் அப்பகுதியில் உள்வளைந்து காணப்படும். அமாவாசை நாளில் வழக்கமாக நீர்மட்டம் குறையும் போது, மேடான பகுதி வெளியே தெரிவதால் கடல் வெகுதூரம் உள்வாங்கியது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

காலநிலை மாற்றங்களால் அலைகளின் வேகத்திலும் உயரத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டாலும், இந்த நிகழ்வு முற்றிலும் இயல்பான ஒன்றுதான் என ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.