விவசாயிகளுக்கு 100% பாசன மானியம்.. மத்திய அரசின் அசத்தலான சலுகை... முழு விபரம்!
விவசாயத்தில் நீர் வீணாவதைத் தடுக்கவும், குறைந்த நீரில் அதிக மகசூல் பெற்று விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும் மத்திய அரசு 'பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா' திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனக் கருவிகளுக்கு மாபெரும் மானிய சலுகையை வழங்கி வருகிறது.
நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைக்க விவசாயிகளின் நில அளவிற்கு ஏற்ப மானியம் வழங்கப்படுகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100% முழு மானியம், இதர விவசாயிகளுக்கு 75% மானியம் வழங்கப்படுகிறது.

பயிர்களின் வேர்ப் பகுதிகளுக்கு நேரடியாகத் தேவையான அளவு நீரை மட்டும் வழங்கி, தண்ணீர் விரயமாவதைத் தடுப்பதும், களைச்செடிகள் வளர்வதைக் கட்டுப்படுத்தி விளைச்சலை அதிகரிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்தப் பாசன மானியத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அல்லது தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.

நிலத்திற்கான பட்டா மற்றும் சிட்டா நகல் (அடங்கல்), ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல், மானியத் தொகை வரவு வைக்கப்படுவதற்கான வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை சமர்பிக்கவேண்டும்.
ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் விவசாயிகளின் நிலங்களில் சொட்டு நீர் அல்லது தெளிப்பு நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் அமைத்துத் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
