பிரியாணி சாப்பிட்ட 100 பேருக்கு உடல்நலக் குறைவு - சென்னையில் சிக்கன் விநியோக நிறுவனத்தை மூட அரசு உத்தரவு!

 
சிக்கன் சீல் மருத்துவமனை சிக்கன் சீல் மருத்துவமனை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நேற்று சிக்கன் பிரியாணி சாப்பிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனத் தொழிலாளர்களுக்குக் கடுமையான உணவு நச்சுத்தன்மை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை கந்தன்சாவடியில் உள்ள முக்கியச் சிக்கன் விநியோக நிறுவனத்தைத் தற்காலிகமாக மூடி சீல் வைக்க உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்  வளாகத்தில் உள்ள ஒரு தனியார் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, நேற்று மதிய உணவாகச் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டுள்ளது. பிரியாணி சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே, அடுத்தடுத்து 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்குக் கடுமையான வயிற்று வலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

சீல் பிரியாணி மருத்துவமனை வாந்தி மயக்கம்

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளில் அவசரக் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்களுக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணையில் இறங்கினர்.

முதற்கட்ட விசாரணையில், தொழிலாளர்களுக்குப் பிரியாணி சமைத்து வழங்கிய உணவு விநியோக நிறுவனத்திற்கு அதிகாரிகள் உடனடியாகச் சீல் வைத்தனர். அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தீவிரப் புலனாய்வில், அந்த ஹோட்டலுக்குச் சமையலுக்காகப் பயன்படுத்தப்பட்ட கோழி இறைச்சி முழுவதும் சென்னை கந்தன்சாவடி பகுதியில் உள்ள ஒரு மொத்த விலை சிக்கன் விநியோக நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பிரியாணி

இதனைத் தொடர்ந்து, இன்று காலை கந்தன்சாவடியில் உள்ள அந்தச் சிக்கன் விநியோக நிறுவனத்திற்குச் சென்ற அதிகாரிகள், அங்குள்ள இறைச்சியின் தரம் குறித்துப் பலத்த சந்தேகம் எழுந்ததால், மறு உத்தரவு வரும் வரை அந்த நிறுவனத்தைத் தற்காலிகமாக மூடி சீல் வைக்க அதிரடி ஆணை பிறப்பித்துள்ளனர். மேலும், அங்கிருந்த இறைச்சி மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.