வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசினால் ரூ1000 அபராதம்!
புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் சாலை விபத்துகளைக் குறைக்கவும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துபவர்களைக் கண்டறிய முக்கிய சந்திப்புகள் மற்றும் விபத்து அதிகம் நடக்கும் பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விதியை மீறுபவர்களுக்கு மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் உடனுக்குடன் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 13 ம் தேதி மட்டும் நடத்தப்பட்ட சோதனையில் செல்போன் பயன்படுத்தியதாக 302 நபர்களுக்கு அபராதச் சீட்டு வழங்கப்பட்டு மொத்தம் 3.02 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு சோதனை இனிவரும் நாட்களிலும் தொடர்ந்து நடைபெறும் எனப் போக்குவரத்து காவல்துறை சீனியர் சூப்பிரண்டு திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார். சாலை விதிகளைக் கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
வாகனம் ஓட்டும்போது அவசர அழைப்புகள் அல்லது செய்திகளை கவனிக்க வேண்டியிருந்தால் பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டுப் பேசுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கவனச்சிதறலால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கவே இந்தச் சட்ட நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி விபத்தில்லா புதுச்சேரியை உருவாக்க வேண்டும் என்பதே காவல்துறையின் முக்கிய நோக்கமாக உள்ளது.
