தடுப்பூசி செலுத்திய 10 மாத குழந்தை உயிரிழப்பு... பெற்றோர், உறவினர்கள் போராட்டம் - கோவையில் சோகம்!
கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 10 மாத பச்சிளங்குழந்தை ஒன்று திடீரென உடல்நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் திடீர் மரணத்திற்கு மருத்துவ பணியாளர்களின் முறையற்ற சிகிச்சையே காரணம் எனக் குற்றம் சாட்டி, பெற்றோரும் உறவினர்களும் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குவழக்கமான தடுப்பூசி செலுத்துவதற்காக 10 மாத பெண் குழந்தையான கனிஷ்கா ஸ்ரீ என்பவரது பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவ ஊழியர்கள் குழந்தைக்குரிய தடுப்பூசியைச் செலுப்பியுள்ளனர். தடுப்பூசி போட்ட சில மணி நேரங்களிலேயே குழந்தைக்கு உடல்நிலையில் திடீர் தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன் கடுமையான பாதிப்பும் உண்டாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து குழந்தைக்குச் சரியான முறையில் முதலுதவி மற்றும் உடனடி மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என்றும், உரிய நேரத்தில் கவனிக்கத் தவறியதால்தான் குழந்தை உயிரிழந்ததாகவும் பெற்றோர் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளனர்.
தடுப்பூசிக்குப் பின் தங்களது குழந்தை உயிரிழந்ததற்குக் காரணம் அரசு மருத்துவக் கட்டமைப்பில் ஏற்பட்ட அலட்சியமும், மருத்துவர்களின் தவறான சிகிச்சையுமே என்று கூறிப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் குதித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகளும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். தடுப்பூசி செலுத்தப்பட்ட விதம் மற்றும் மருத்துவமனையின் பதிவேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. பச்சிளங்குழந்தை இழந்த சோகத்தில் குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் ஆழ்ந்துள்ளனர்.
