10ம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்ய அனுமதி!

 
அரசு தேர்வுகள் இயக்ககம் அரசு தேர்வுகள் இயக்ககம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாளின் நகலை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 20-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து மாணவர்கள் விடைத்தாள் ஒளி நகல் கோரி விண்ணப்பித்த மனுக்கள் மாநிலம் முழுவதும் இருந்து பெறப்பட்டுள்ளன.

அரசுத் தேர்வுகள் இயக்குநர் அதிரடி அறிவிப்பு

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விடைத்தாள் நகல் கோரி கூடுதல் எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகத் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 52,236 விண்ணப்பங்கள் வந்த நிலையில் இந்த ஆண்டு 74,862 விண்ணப்பங்கள் வந்துள்ளன. விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் பாட வாரியாக பல்வேறு கட்டங்களாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் விடைத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகலைப் பார்த்த பின்னர் மாணவர்கள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் படிவத்தையும் அதே இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வருகிற 17.06.2026 முதல் 23.06.2026-க்குள் இதற்கான கட்டணத்தைப் பணமாகச் செலுத்தி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.