11 இந்திய கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாகக் கடந்தன! அமெரிக்கா - ஈரான் தற்காலிக அமைதி ஒப்பந்தம்!

 
இந்தியா கப்பல் ஹார்முஸ் எண்ணெய் ஏற்றுமதி

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள தற்காலிக அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, உலக அளவில் முக்கிய எண்ணெய் வர்த்தக வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை 11 இந்திய வணிகக் கப்பல்கள் வெற்றிகரமாகக் கடந்து இந்தியா நோக்கிப் பயணித்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கத் தரப்பினரிடையே சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக இந்தத் தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த தற்காலிக உடன்படிக்கையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், அடுத்த 60 நாட்களுக்குள் இருதரப்பும் விரிவான அம்சங்களை ஆராய்ந்து இறுதி ஒப்பந்தம் குறித்து விவாதிக்கவுள்ளன.

ஹார்முஸ்

இந்த உடன்படிக்கையின் முதற்கட்டப் பலனாக, ஈரானால் மூடப்பட்டிருந்த ஹார்முஸ் நீரிணைப் பகுதி வழியாகப் பன்னாட்டு வணிகக் கப்பல்களின் போக்குவரத்து மீண்டும் சுமுகமாகத் தொடங்கியுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாகக் கடந்துள்ள 11 இந்தியக் கப்பல்களின் சரக்கு விபரங்கள் பின்வருமாறு:

கடந்து வந்துள்ள கப்பல்களில் 3 கப்பல்கள் இந்தியக் கொடி ஏந்தியவை ஆகும். இவை சுமார் 2 லட்சத்து 85 ஆயிரம் டன் கச்சா எண்ணெய்யைச் சுமந்து கொண்டு இந்தியா நோக்கி வந்துகொண்டிருக்கின்றன.

ஹார்முஸ் ஜலசந்தி பாரசீக வளைகுடா இந்தியக் கப்பல்

மேலும், எஞ்சிய 8 வணிகக் கப்பல்களில் இந்தியாவின் தற்போதைய தேவைகளுக்கான கச்சா எண்ணெய், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் விவசாயத்திற்கான உரங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு வரப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நிலவிய பதற்றமான சூழலுக்குப் பின், ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியக் கப்பல்கள் எவ்வித இடையூறுமின்றிப் பாதுகாப்பாகத் திரும்பியிருப்பது நாட்டின் எரிசக்தி மற்றும் வர்த்தகத் துறைக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.