பிறந்தநாள் கேக்கில் இறந்த பல்லி - கேக் சாப்பிட்ட 11 பேர் மருத்துவமனையில் அனுமதி!
மும்பை அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வாங்கப்பட்ட கேக்கில் இறந்த பல்லி கிடந்த அதிர்ச்சிச் சம்பவத்தால், அதைச் சாப்பிட்ட 11 பேருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை அருகே உள்ள நாலாசோபரா பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவிற்காக உள்ளூர் கடையில் இருந்து கேக் ஒன்று வாங்கப்பட்டுள்ளது. கொண்டாட்டத்தின் போது கேக்கை வெட்டி அனைவருக்கும் கொடுத்துள்ளனர். அப்போது அந்த கேக்கிற்குள் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். கேக்கைச் சாப்பிட்ட குழந்தைகள் உட்பட 11 பேருக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற தீவிர உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட 11 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பண்டிகை மற்றும் பிறந்தநாள் போன்ற கொண்டாட்டத் தருணங்களில் கடைகளில் வாங்கி உட்கொள்ளும் உணவுகளைப் பரிமாறுவதற்கு முன், அவை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறதா என்பதைப் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் பார்த்து உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
