உ.பி.யில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் குழந்தைகள் உட்பட 11 பேர் பலி - முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பியில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கௌசாம்பியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் குழந்தைகள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபட்டின் தாக்கத்தால் தொழிற்சாலை மட்டுமல்லாமல், அதன் அருகிலிருந்த குடியிருப்பு வீடுகளும் இடிந்து சேதமடைந்தன.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 2 லட்சமும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா ரூ. 50 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும், இச்சம்பவத்திற்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
