சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1,150 பேர் திடீர் ராஜினாமா - விழுப்புரத்தில் அதிமுகவில் பெரும் பிளவு!

 
சி.வி. சண்முகம்

விழுப்புரம் மாவட்டத்தில் அ.தி.மு.க உள்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ அர்ஜூனன் உட்படச் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் 1,150 பேர் தங்களது கட்சிப் பொறுப்புகளிலிருந்து ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளனர். இந்த விலகல் சம்பவம் அதிமுக தலைமைக்கும் கட்சி தொண்டர்களுக்கும் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் தங்களது ராஜினாமா கடிதங்களை ஒப்படைத்த சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள், செய்தியாளர்களைச் சந்தித்துக் காரசாரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்: சி.வி.சண்முகத்திற்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படாததால் அதிருப்தியடைந்த நிர்வாகிகள் இந்தத் தீவிர முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

தலைமை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

"தற்போதைய அதிமுக தலைமை சரியில்லை. தகுதியில்லாத நபர்களுக்குப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிர்வாகிகளுடன் எங்களால் இனி பயணிக்க முடியாது" என அவர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். கட்சிக்காக அரும்பாடுபட்ட மூத்த தலைவரான சி.வி.சண்முகத்தைக் கட்சியின் சிலர் ஒருமையில் பேசி அநாகரிகமாக நடத்துவதாகவும், அதனாலேயே அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்தனர்.

நாங்கள் மனப்பூர்வமாகக் கட்சியிலிருந்து விலகவில்லை என்று கூறிய ஆதரவாளர்கள், "நாங்கள் கட்சியிலிருந்து போக வேண்டும் என்று நினைக்கவில்லை; சூழ்நிலையே எங்களை இந்த முடிவுக்குத் தள்ளியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் அம்மாவின் ஆத்மா என்றும் எங்களிடம் தான் இருக்கும்" எனக் உணர்ச்சிப்பூர்வமாகப் பேட்டியளித்தனர். ஒரே நாளில் 1,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகியிருப்பது விழுப்புரம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.