பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைப்பதற்கு 12 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு.. போராட்டம் நடத்த முடிவு!
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் கட்டப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு மீனவ மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தலைமைச்செயலகக் கட்டிடம் கட்டப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலமான அந்த இடத்தில் தலைமைச்செயலகம் அமைந்தால் தங்களின் பாரம்பரிய வாழ்வாதாரமும் வாழ்வியலும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முள்ளிகுப்பம், முள்ளிமாநகர், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், ராஜீவ்காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜபுரம், டூமிங் குப்பம், நொச்சி நகர் உள்ளிட்ட 12 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் படகுகள் நிறுத்தும் இடமும், வலைகளைப் பிணைக்கும் இடமும் இதனால் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆமைகள் முட்டையிடும் பகுதிகளில் எந்தவிதக் கட்டிடங்களும் கட்டக்கூடாது என நீதிமன்றத்தின் உத்தரவு இருக்கும் போதே, அரசு இந்தப் பகுதியைத் தேர்ந்தெடுத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என மீனவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

அரசின் இந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தவும், தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவும் வருகிற செப்டம்பர் 15-ம் தேதி பட்டினப்பாக்கத்தில் பிரம்மாண்டமான ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட உள்ளதாக மீனவ கிராம சபை ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
