தென்காசியில் வெறிநாய் அட்டகாசம் - ஒரே நாளில் 12 பேருக்குக் கடி!

 
வெறிநாய் வெறிநாய்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புளியங்குடி நகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை எல்லை மீறிச் சென்றுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் ஒரு வெறிநாய் 12 பேரை விரட்டி விரட்டிக் கடித்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புளியங்குடி நகரின் முக்கிய வீதிகளில் நேற்று சுற்றித் திரிந்த ஒரு நாய் திடீரென வெறிபிடித்தது போல் அங்கிருந்த பொதுமக்களைத் தாக்கத் தொடங்கியது. சாலையில் நடந்து சென்றவர்கள், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் எனப் பார்த்த அனைவரையும் அந்த நாய் துரத்திச் சென்று கடித்தது. மைதீன்பீவி, பழனி (55), அப்பாதுரை (45), மாரிப்பன் (60), சுலைமான் (62), சமுத்திரம், இசக்கியம்மாள் உள்ளிட்ட 12 பேர் அந்த நாயிடம் சிக்கிப் படுகாயமடைந்தனர். பலத்த காயமடைந்த மைதீன்பீவி தற்போது புளியங்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 11 பேரும் முதலுதவி சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வீடு திரும்பினர்.

வெறிநாய்

சாலையில் அமைதியாக நடந்து சென்ற ஒரு பெண்ணை, அந்த நாய் பின்னால் இருந்து ஓடி வந்து பாய்ந்து கடித்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து புகார் எழுந்ததைத் தொடர்ந்து, புளியங்குடி நகராட்சிப் பணியாளர்கள் உடனடியாகச் செயல்பட்டு அந்த வெறிநாயைத் தேடிப் பிடித்தனர். பிடிபட்ட நாய் தற்போது பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனினும், நகரின் பிற பகுதிகளில் சுற்றித் திரியும் நூற்றுக்கணக்கான தெருநாய்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெறிநாய்

புளியங்குடி மற்றும் கடையநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை பல மாதங்களாக நீடித்து வருவதாகவும், குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுவதாகவும் அப்பகுதி வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். நகராட்சி நிர்வாகம் முறையாக நாய்களுக்குக் கருத்தடை செய்யவும், வெறிநாய்களை அப்புறப்படுத்தவும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.