"24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்" - உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதமாகி உள்ள நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்துப் பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் விஜய்யை நோக்கிக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின், தற்போதைய அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. சட்டம் ஒழுங்கைக் காக்கத் தாங்கள் நியமித்ததாகப் பெருமையுடன் சொல்லிக் கொண்ட திறமையான அதிகாரிகள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே?" மேலும், சமீபத்தில் நடந்த சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி தவெக அரசை 'காட்டாட்சி' என்று அவர் சாடியுள்ளார்.

"பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிக் கொடூரமான முறையில் உயிரிழந்த அந்தப் பிஞ்சு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய், தந்தையருக்குக் கூடத் தெரியாமல், மறைமுகமாக வேறு இடத்தில் உடல்களை அவசர அவசரமாக அடக்கம் செய்யும் அளவிற்குத் தற்போதைய அரசு ஈவு இரக்கமற்று நடந்துகொள்கிறது. நீங்கள் நடத்தும் இந்த ஈவு இரக்கமற்ற காட்டாட்சி விரைவில் வீழ்வது உறுதி" என்று உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
