அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் 12 மாணவிகள் திடீர் மயக்கம் - சிவகங்கையில் பதற்றம்!

 
சிவகங்கை மாணவிகள் மயக்கம்

சிவகங்கை அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் போதிய வசதிகள் இல்லாததைக் கண்டித்து, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

கல்லூரி நிர்வாகம் தரப்பில் வளாகத்தின் வெளிவாசல் கதவுகள் பூட்டப்பட்டதால், மாணவிகள் அனைவரும் கடும் வெயிலிலும் வெப்பத்தின் தாக்கத்திலும் நுழைவுவாயிலுக்கு வெளியிலேயே நின்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேரமாக ஆக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததால், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவிகளில் 12 பேர் அடுத்தடுத்துத் திடீரென மயங்கி விழுந்தனர்.

சிவகங்கை மாணவிகள் மயக்கம்

மயக்கமடைந்த மாணவிகளை உடனடியாக சக மாணவிகளும் அங்கிருந்தவர்களும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.