120 கி.மீ. வேகத்தில் சீறிப்பாய்ந்த கார்... விபத்திற்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் 6 நண்பர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியான துயரம்!
கங்கை நதியில் புனித நீராடுவதற்காக ஹரித்வாருக்குச் சென்று கொண்டிருந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் பயணித்த கார், தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்ததில் 6 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள பானிபட் - கதிமா தேசிய நெடுஞ்சாலையில், திதாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜக்கஹேரி சுங்கச்சாவடி அருகே உள்ள மேம்பாலத்தில் அதிகாலை 4:50 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விபத்தின் போது கார் மணிக்குச் சுமார் 120 கி.மீ. வேகத்தில் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார் முதலில் சாலையோர மின் கம்பத்தில் பலமாக மோதியது. மோதலின் வேகத்தில் மின் கம்பம் இரண்டாக முறிந்ததோடு, சாலைத் தடுப்பின் சுமார் 10 மீட்டர் பகுதியும் சேதமடைந்தது.

சாலைத் தடுப்பில் ஏறிய கார் எதிர் திசைப் பாதையில் கவிழ்ந்த அடுத்த நொடியே தீப்பிடித்து எரியத் தொடங்கியது. கார் கதவுகள் பூட்டிக்கொண்டதால், உள்ளே இருந்த 6 இளைஞர்களும் வெளியேற முடியாமல் தீயில் சிக்கிக் கொண்டனர். இது குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் சுமார் ஒரு மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானதில் 6 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த 6 பேரும் ஹரியானா மாநிலம் ஹான்சி மாவட்டத்தில் உள்ள ராகி கர்ஹி மற்றும் மோத் லுஹாரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் ஆவர். சாஹில் (20), ராகுல் (23) மற்றும் 21 வயதுடைய அமன், அஜய், அங்கித் (ராஜேஷின் மகன்), அங்கித் (சமுந்தரின் மகன்) ஆகியோர் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் அமன், அஜய் மற்றும் ராஜேஷின் மகன் அங்கித் ஆகிய மூவரும் கல்லூரி மாணவர்கள். சமுந்தரின் மகன் அங்கித் ஏசி மெக்கானிக்காகவும், அவரது சகோதரர் ராகுல் வெல்டராகவும் பணிபுரிந்து வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் படுக்கையில் இருக்கும் தந்தையைக் காப்பாற்றி வந்த இந்த இரு சகோதரர்களின் மரணம் அந்தக் குடும்பத்தை ஆதரவின்றித் தவிக்க விட்டுள்ளது.

சாஹில் தனது உறவினரிடம் இருந்து காரை இரவல் வாங்கி, நள்ளிரவு 12:30 மணியளவில் நண்பர்களுடன் புறப்பட்டுள்ளார். வீட்டில் குருகிராம் செல்வதாகக் கூறிவிட்டு அவர்கள் ஹரித்வாருக்குப் பயணித்ததாகக் குடும்பத்தினர் சோகத்துடன் தெரிவித்துள்ளனர்.
ஆறு இளைஞர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அவர்களது சொந்த கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து முசாபர்நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
