உதகையில் 128-வது மலர் கண்காட்சி... நீலகிரி மாவட்டத்திற்கு மே 18ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

 
ஊட்டி ஊட்டி

கோடை சீசனையொட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற உதகை (ஊட்டி) அரசு தாவரவியல் பூங்காவில், 128-வது மலர் கண்காட்சி வரும் மே 18-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்திற்கு எதிர்வரும் மே 18-ம் தேதி திங்கட்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த விடுமுறை குறித்த முக்கிய விவரங்கள் இதோ:

ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் உதகைக்கு லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். அவர்களை மகிழ்விக்கும் விதமாக இந்த ஆண்டும் மே 18-ம் தேதி தொடங்கும் இந்த மலர் கண்காட்சி தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு மலர் கண்காட்சியை முன்னிட்டு பூங்கா முழுவதும் வண்ணமயமாகக் காட்சியளிக்கிறது.

கொடைக்கானல் மலர் கண்காட்சி

ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்ட 275 வகையான மலர் விதைகள் மூலம் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஜெரேனியம், ஆர்னமெண்டல்கேல், ஓரியண்டல்லில்லி, டேலியாக்கள், பேன்சி, பெட்டுனியா, சன்பிளவர், ஆந்தூரியம் உள்ளிட்ட பல வண்ண மலர்களைக் கொண்ட 10 லட்சம் மலர்ச் செடிகள் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்யப்பட்டுத் தற்போது பூத்துக் குலுங்குகின்றன.

மலர்க் காட்சியின் முக்கிய ஈர்ப்பான மலர் கண்காட்சி மாடம் மற்றும் கண்ணாடி மாளிகையில் மட்டும் 50,000 வண்ண மலர்த் தொட்டிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு வருகின்றன.

நீலகிரி

மலர் கண்காட்சி தொடக்க நாளை முன்னிட்டு மே 18-ம் தேதி நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, வரும் ஜூன் 6-ம் தேதி சனிக்கிழமை அன்று முழு வேலை நாளாகச் செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், உதகையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், தடையற்ற குடிநீர் மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தவும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.