ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை, ரொக்கம் கொள்ளை!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பூட்டியிருந்த ராணுவ வீரரின் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவகோட்டை தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமன். ராணுவ வீரரான இவரது குடும்பத்தினர் வெளியே சென்றிருந்த நேரத்தில், வீட்டின் முன்பக்கப் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.
வீட்டின் பீரோவை உடைத்த கொள்ளையர்கள், அதில் வைக்கப்பட்டிருந்த 13 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.80,000 ரொக்கப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

வீட்டிற்குத் திரும்பிய குடும்பத்தினர் பூட்டு உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தேவகோட்டை காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் த தடயங்களைச் சேகரித்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
