மணிக்கு 130 கி.மீ. வேகம்... இந்தியாவின் முதல் 'வந்தே பாரத்' சரக்கு இரயில் சோதனை ஓட்டம் வெற்றி!
சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயும் திறன் கொண்ட நாட்டின் முதல் 'வந்தே பாரத்' சரக்கு இரயில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாகப் பதப்படுத்தும் அதிநவீன வசதிகளைக் கொண்ட இந்த 16 பெட்டிகள் கொண்ட இரயில், கடந்த மார்ச் மாதம் இரயில்வே வாரியத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இந்திய இரயில்வேயின் சரக்குப் போக்குவரத்து வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படும் இந்த வந்தே பாரத் சரக்கு இரயில், வர்த்தகத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை பெரம்பூர் தொழிற்சாலையின் தயாரிப்பான இந்த இரயில், அதிவேகத்தில் பொருட்களை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், மத்திய பிரதேசத்தின் கதிரூ மற்றும் மஹ்பூ ஆகிய பகுதிகளுக்கு இடையே மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு, இதன் முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. சோதனை ஓட்டத்தின் போது இரயிலின் வேகம், பெட்டிகளின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டன. அதிவேகத்தில் இயக்கப்பட்டபோதிலும் இரயிலின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் இருந்ததாக இரயில்வே அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இந்த வெற்றிச் சோதனையைத் தொடர்ந்து, இரயிலை விரைவில் வணிகரீதியான பயன்பாட்டிற்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டு வருகிறது.
நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே அழுகும் தன்மையுடைய உணவுப் பொருட்களை அதிவேகத்தில் கொண்டு சேர்க்க இச்சரக்கு இரயில் பெரிதும் பயன்படும். விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களின் விளைபொருட்கள் வீணாகாமல் விரைவாகச் சந்தைக்குச் சென்றடைய இத்திட்டம் பெரும் உறுதுணையாக இருக்கும். சோதனை ஓட்டங்கள் அனைத்தும் முழுமையாக முடிந்த பிறகு, இந்த வந்தே பாரத் சரக்கு இரயில் சேவை விரைவில் முறைப்படி தொடங்கி வைக்கப்படும் எனத் தெரிகிறது. சென்னையில் உருவான இந்த வந்தே பாரத் சரக்கு இரயிலின் வெற்றிகரமான சோதனை ஓட்டம் இரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
