ரூ.4 கோடி மதிப்புள்ள 13,000 இ-சிகரெட்டுகள் பறிமுதல் - மும்பை துறைமுகத்தில் அதிர்ச்சி!
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள 13,000 மின்னணு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாகத் தடைசெய்யப்பட்ட மின்னணு சிகரெட்டுகள் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், நவி மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்தின் சரக்குகளைக் கையாளும் பகுதியில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள சரக்குப் பெட்டகங்களில் சுமார் 13,000 இ-சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இ-சிகரெட்டுகளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.4 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், இந்தியாவில் இ-சிகரெட்டுகளைத் தயாரிப்பது, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வது, விற்பனை செய்வது, விநியோகிப்பது மற்றும் சேமித்து வைப்பதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி எல்லை தாண்டிய கடத்தலில் ஈடுபடுவோர் மீது வருவாய் புலனாய்வுத் துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. 2026-2027-ஆம் நிதியாண்டில் இதுவரை நாடு முழுவதும் சுமார் ரூ.135 கோடி மதிப்பிலான 3.55 லட்சம் இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய மையங்களில் கண்காணிப்பு: மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கியத் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளின் மூலமே இந்தப் பெருமளவிலான மின்னணு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நாட்டின் பொருளாதார நலனைக் காக்கவும், இளைஞர்களைப் போதைப் பழக்கத்திலிருந்து மீட்கவும் இத்தகைய கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
