சவுதி மண்ணில் பாகிஸ்தான் போர் விமானங்கள் - 13,000 வீரர்கள் வருகை... பாதுகாப்பு ஒப்பந்தம் அமலுக்கு வந்தது!

 
சவூதி பாகிஸ்தான் சவூதி பாகிஸ்தான்

மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றமான சூழலுக்கு இடையே, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான ராணுவ உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் தனது போர் விமானங்களையும், ஆயிரக்கணக்கான வீரர்களையும் சவுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

கடந்த 2025 செப்டம்பரில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ரியாத் சென்றிருந்தபோது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது இரு நாடுகளின் மீதான தாக்குதலாகவே கருதப்படும். ஆபத்தான காலங்களில் இரு நாடுகளும் ராணுவ ரீதியாக ஒருவருக்கொருவர் துணையாக நிற்பதை இது உறுதி செய்கிறது.

பாகிஸ்தான் இஷாக் தார்

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த சூழலில், சவுதி அரேபியாவின் வேண்டுகோளை ஏற்று பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சுமார் 13,000 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சவுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

சவுதியின் கிழக்கு மாகாணத்தில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் விமான தளத்தில் பாகிஸ்தானின் போர் விமானங்கள் நேற்று அணிவகுத்துத் தரையிறங்கின.

ட்ரம்ப் சவூதி

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை நேரில் சந்தித்து, சவுதி அரேபியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் பாகிஸ்தான் உறுதியாக இருக்கும் என்று மீண்டும் உறுதி அளித்துள்ளார்.
சர்வதேச அளவில் நிலவும் போர் அச்சங்களுக்கு மத்தியில், இந்த ராணுவ நகர்வு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு அரணாகப் பார்க்கப்படுகிறது.