13.22 ஏக்கர் பரப்பளவு... புதிய தலைமைச் செயலகம் பல்லவன் இல்லத்துக்கு மாறுகிறதா? ஆய்வு செய்யும் தமிழக அரசு!
சென்னையில் சுமார் 1,200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்திற்காகப் பட்டினப்பாக்கம் மீனவர்கள் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசு மாற்று இடங்களைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சென்னை பல்லவன் இல்லம் அமைந்துள்ள 13.22 ஏக்கர் பரப்பளவிலான மாநகரப் போக்குவரத்துக் கழக வளாகத்தைப் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இடம் அரசுக்குச் சொந்தமான நிலம் என்பதால் நிலட ஆக்கிரமிப்பு சிக்கல்கள் எதுவும் எழாது என்பதாலும், பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் உள்ளிட்ட அனைத்துப் பொதுப்போக்குவரத்து வசதிகளுக்கும் மிகவும் ஏதுவாக இருக்கும் என்பதாலும் இப்பகுதி முதன்மையாகக் கருதப்படுகிறது.

மேலும், தற்போது பல்லவன் இல்ல வளாகத்தில் இயங்கி வரும் போக்குவரத்துத் தலைமையக அலுவலகங்களைக் கோயம்பேட்டுக்கு மாற்றுவது குறித்தும் அரசு தரப்பில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
