தமிழகத்தில் 1,328 ரவுடிகள் கைது... போதை கும்பலை வேரறுக்கும் டி.ஜி.பி. மகேஷ் குமார்!
தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை இரும்புக்கரம் கொண்டு பராமரிக்கும் நோக்கிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் காவல்துறை தற்போது மிகப்பெரிய அதிரடி வேட்டையில் இறங்கியுள்ளது. தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் பிறப்பித்த அதிரடி உத்தரவின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள், ரவுடிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராகத் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரையிலான காலகட்டத்தில், தமிழகம் முழுவதும் போலீசார் நடத்திய தொடர் வேட்டையில் மொத்தம் 36,740 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளின் வீடுகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தீவிர நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச்செயல்களில் நேரடியாகத் தொடர்புடைய 1,328 முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜூன் 1 முதல் ஜூன் 10 வரை நடத்தப்பட்ட சிறப்புப் பிடியாணை அமலாக்க நடவடிக்கையில், நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்த 2,939 ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மறுபுறம், தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப்பொருள் கும்பலை ஒழிக்க மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பல்வேறு தனிப்படைகளாகப் பிரிந்து மாநில எல்லைகள் மற்றும் முக்கிய நகரங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் மொத்தம் 202 போதைப் பொருள் வியாபாரிகள் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து 231 கிலோ கஞ்சா, 4,073 போதை மாத்திரைகள், 22.55 கிராம் மெத்தாம்பெட்டமைன் மற்றும் 362 கிலோ குட்கா போன்ற தடை செய்யப்பட்ட நச்சுப் பொருட்கள் மொத்தமாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 14 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்றதற்குப் பின்னர், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இதுவரை ஒட்டுமொத்தமாக 2,172 ரவுடிகள் மற்றும் 621 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது கடுமையான கைது நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன. பொதுமக்களின் நிம்மதியைக் கெடுக்கும் ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளுக்கு எதிராக இந்த வேட்டை எவ்வித சமரசமும் இன்றித் தொடர்ந்து தீவிரமாகப் பாயும் என்று போலீஸ் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
