சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் 137-வது பிறந்தநாள்.. முதல்வர் விஜய் மலர் தூவி மரியாதை!

 
அஞ்சலை அம்மாள் அஞ்சலை அம்மாள்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தென்னாட்டு ஜான்சி ராணி என்று மகாத்மா காந்தியடிகளால் போற்றப்பட்ட கடலூர் அஞ்சலை அம்மாளின் 137-வது பிறந்தநாள் இன்று  தமிழகம் முழுவதும் தேசப்பற்றுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் வீரமங்கையின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவித் தனது மரியாதையைச் செலுத்தியுள்ளார்.

தமிழகத்தின் கடலூரில் பிறந்து, இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மிகத் தீவிரமாகப் போராடிய பெருமைக்குரியவர் அஞ்சலை அம்மாள். நீலன் சிலை அகற்றும் போராட்டம், உப்புச் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்துகொண்டு பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர். கடலூருக்கு மகாத்மா காந்தி வந்தபோது, அவரைச் சந்திக்க ஆங்கிலேய அரசு அஞ்சலை அம்மாளுக்குத் தடை விதித்தது. ஆனால், அந்தத் தடையை மீறித் துணிச்சலாகப் புடவை கட்டிய குதிரை வண்டியில் மாறுவேடத்தில் வந்து காந்தியைச் சந்தித்து வியக்க வைத்தார். இவரின் அசாத்திய வீரத்தைப் பாராட்டியே காந்தி இவரை 'தென்னாட்டு ஜான்சி ராணி' என்று அழைத்தார்.

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க வீரமங்கையின் தியாகத்தை இந்தத் தலைமுறைக்கு நினைவூட்டும் விதமாக, இன்று திருச்சி பயணத்தில் இருக்கும் தமிழக முதலமைச்சர் விஜய், அஞ்சலை அம்மாளின் 137-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர்களைத் தூவி, கைகளைக் கூப்பித் தனது நெகிழ்ச்சியான மரியாதையைச் செலுத்தியுள்ளார்.